வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா-தெலங்கானா.. 9 பேர் உயிரிழப்பு.. பேருந்து-ரயில் சேவை முடக்கம்!

''புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே விஜயவாடா நகரம் பெரும் பாதிப்பை சந்திக்க காரணமாகும். முந்தைய அரசு புடமேரு கால்வாயை தூர்வாராமல் புறக்கணித்ததால் இப்போது பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ளது'' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Sep 1, 2024 - 19:28
Sep 2, 2024 - 10:09
 0
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா-தெலங்கானா.. 9 பேர் உயிரிழப்பு.. பேருந்து-ரயில் சேவை முடக்கம்!
Floods In Andhra And Telangana

விஜயவாடா: நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகனமழை  பெய்து வருவதால் இந்த இரண்டு மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.குறிப்பாக ஆந்திராவின் விஜயவாடா நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 

புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விஜயவாடாவின் நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் உள்ள அம்பாபுரம், நைனாவரம், நுண்ணா, பத்தபாடு கிராமங்களை சூழ்ந்துள்ளது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கூரைகளில் ஏறி தஞ்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள 5 மாவட்டங்களில் உள்ள 294 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதேபோல் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் கனமழை விடமால் கொட்டி வருவதால் குடியிருப்பு பகுதிகள் மழைநீரில் மிதக்கின்றன. இதேபோல் விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர நகரங்களிலும் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை படகுகள் மூலம் மாநில, தேசிய மீட்பு படையினர், காவல் துறையினர் இணைந்து மீட்டு வருகின்றனர். ஆந்திராவில்  294 கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 13,277 மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் வாங்கலப்புடி அனிதா தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து  முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதேபோல் ரயில் போக்குவரத்து சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேசமுத்ரம்- மகபூபாத் இடையே மழை வெள்ளத்தில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது. இதுவரை 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆந்திராவில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். விஜயவாடா நகரில் மொகல்ராஜபுரம் என்ற இடத்தின் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெடகாக்கனி என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் ஆசிரியர், 2 மாணவர்கள் பலியாகினர். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகளில் அதீத கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ''புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே  விஜயவாடா நகரம் பெரும் பாதிப்பை சந்திக்க காரணமாகும். முந்தைய அரசு புடமேரு கால்வாயை தூர்வாராமல் புறக்கணித்ததால் இப்போது பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்'' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow