உலகம்

இது புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு.. புறணி பேசியே வீடு வாங்கிய மூதாட்டி!

By Christon
08 Aug 2026, 05:26 PM
கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி புறணி பேசுவதையே தொழிலாக மாற்றி 2 வீடுகள் வாங்கியுள்ளார்.
கொலம்பியாவைச் சேர்ந்த 67 வயதான மிரியம் என்ற மூதாட்டி, தனக்கு இருந்த புறணி பேசும் ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றியுள்ளார். ஊர் கதைகளையும் வதந்திகளையும் சேகரித்து விற்பதன் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன் வீட்டின் முன் அமர்ந்து ஊர் செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்கும் மிரியம், தான் கேட்கும் தகவல்களை உடனடியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறார். சாதாரணத் தகவல்களுக்கு 5,000 முதல் 10,000 கொலம்பிய பேசோக்கள் வரை கட்டணமாக வசூலிக்கிறார்.

தன் தகவல்களுக்கு ஆதாரமாகப் புகைப்படங்கள் மற்றும் புகைப்படப் பலகை ஒன்றையும் பராமரித்து வருகிறார். கள்ளத்தொடர்பு மற்றும் ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருக்க நபர்களிடம் பணம் பெறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். ஒருமுறை நபர் ஒருவரின் தகவலை ரகசியமாக வைக்க 7,00,000 கொலம்பிய பேசோக்கள் வரை கட்டணமாகப் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.

வாரத்தின் இறுதியில் கிடைக்கும் வருமானத்தைச் சேமித்து வைக்கும் மிரியம், ஆதாரங்கள் இல்லாமல் எந்தத் தகவலையும் பரப்புவதில்லை என்ற கொள்கையையும் பின்பற்றுகிறார். நண்பர்களுடன் தாயக் கட்டை மற்றும் பலகை விளையாட்டுகளை விளையாடும் போது புதிய தகவல்களைச் சேகரிப்பதாகக் கூறும் இவர், புறணி பேசுவது ஒருபோதும் அழியாத தொழில் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

லேடி டேனிலா என்ற உள்ளடக்கப் படைப்பாளர் பகிர்ந்த இந்த நேர்காணல் வீடியோ தற்போது டிக்டாக்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.