உலகம்

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!

By Christon
03 Nov 2026, 08:06 PM
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஓமன் கடலோரப் பகுதி அருகே இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்டத் ட்ரோன் தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்திலிருந்து குஜராத்தின் போர்பந்தர் நோக்கி 14 இந்திய மாலுமிகளுடன் 'எம்.எஸ்.வி அல் ஜூசுபி' (MSV Al JusuFi) என்ற சரக்குக் கப்பல் வந்துகொண்டிருந்தது. நவம்பர் 2-ஆம் தேதி ஓமன் கடலோரப் பகுதி வழியே பயணித்தபோது, ட்ரோன் அல்லது ஏவுகணை போன்ற வான்வழிப் பொருள் மோதி இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்தத் தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த காந்தர் நஹிம் அஜீஜ் என்ற மாலுமி படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். கப்பலில் இருந்த மற்ற 13 இந்திய மாலுமிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, ஓமன் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த மாலுமியின் உடலை இந்தியா கொண்டுவரவும், மீட்கப்பட்ட 13 பேருக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் ஓமனில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் தொடரும் போரினால் சர்வதேசக் கடல் வழிகளில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. மோதல் பகுதியில் இதுவரை 14 மாலுமிகள் உட்பட மொத்தம் 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கவலை தெரிவித்துள்ளார்.