உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பச் சந்தையில் முதன்மையான இடத்தில் இருக்கும் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து அண்மையில் விலகிய ஜென்சன் ஹுவாங், அந்நிறுவனத்தின் மற்றொரு பெண் ஊழியருடன் தனிப்பட்ட திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகத் தற்போது புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்விடியா நிறுவனத்தை இணைந்து தொடங்கி, சுமார் 33 ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட 63 வயதான ஜென்சன் ஹுவாங், நேற்று தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, சிங்கப்பூரைச் சேர்ந்த 'மெகாஸ்பீட்' (Megaspeed) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியும், சீனத் தொழிலதிபருமான ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் அவருக்கு இருந்த நெருக்கம் குறித்த செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடாமல் தனக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி பவலுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் இரண்டாவது பெண் ஊழியர் ஒருவருடனும் அவர் உறவில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த பெண் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆலிஸ் ஹுவாங், சீன உளவுத்துறைக்காகப் பணியாற்றியிருக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சீன அரசு இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட அமெரிக்க AI சிப்களைச் சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கு 'மெகாஸ்பீட்' நிறுவனம் துணைபோனதா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளும், சிங்கப்பூர் அரசும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு உளவுத்துறையின் தலையீடு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.