மேற்காசியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக இஸ்ரேல் தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டை நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது. அதனைத் தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், இஸ்ரேல் தனித்துச் செயல்பட தயங்காது. ஈரானின் அணு அச்சுறுத்தலில் இருந்து எங்கள் நாட்டை பாதுகாத்துள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் தயார்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நேரத்தில், நெதன்யாகுவின் இந்த எச்சரிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுத திட்டம் தொடர்பான விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்காசியாவில் பாதுகாப்பு சூழல் மீண்டும் பதற்றமடையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது