உலகம்

Nepal Flood: வெள்ளப்பெருகில் தப்பிய 'பச்சை வீடு'.. திக் திக் நிமிடங்கள் குறித்து பேசிய ஓனர்!

By Christon
01 Sep 2026, 05:47 PM
நேபாள வெள்ளத்தில் சேதமடையாமல் தப்பிய பச்சை நிற வீட்டின் உரிமையாளர், திக் திக் நிமிடங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சுற்றியிருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், 40 ஆண்டுகள் பழமையான 'பச்சை நிற வீடு' ஒன்று சேதமடையாமல் உறுதியாக நின்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தபோது, பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டனர். நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 4-வது மாடி வரை வந்ததால், குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் உயரமான பகுதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர். அந்த அதிர்ச்சியான நிமிடங்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பச்சை நிற வீட்டின் உரிமையாளர் பிரகாஷ், "இதுதான் நமது வாழ்க்கையின் கடைசித் தருணம் என்று நினைத்தோம். பள்ளிக்கூடம் சென்றிருந்த எனது மகனைப் பற்றிய சிந்தனையே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது" என தெரிவித்தார்.

சுற்றியிருந்த நவீன கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இந்தப் பச்சை நிற வீடு மட்டும் எப்படித் தப்பியது என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. இதற்குக் வீட்டின் வலுவான அடித்தளமே காரணம் எனக் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆற்றுக்கு அருகில் இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு முன்பே தரமான சிமெண்ட், பல அடுக்குச் சாலைப் பொருட்கள் மற்றும் கூடுதல் செலவில் பலமான அடித்தளத்தை அமைத்துக் கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒன்றரை மணி நேரத் தவிப்பிற்குப் பிறகு, வெள்ள நீர் சற்று வடியத் தொடங்கியதும், அருகில் இருந்த சுங்கச்சாவடிப் பகுதி மக்கள் மீட்புப் பணியில் இறங்கினர். கட்டிடங்களுக்கு இடையே பெரிய குழாய் மற்றும் கயிறுகளைப் பிணைத்து, ஆபத்தான முறையில் பிரகாஷின் குடும்பத்தினரை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த கடை, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் பொருளாதாரம் சேதமடைந்தது. இருப்பினும், குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக உயிர்தப்பியுள்ளனர். தற்போது காத்மாண்டுவில் தங்கியிருக்கும் பிரகாஷின் குடும்பத்தினர், சேற்றிலும் வெள்ளத்திலும் எஞ்சிய பொருட்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்தும் அழிந்துபோன போதிலும், மீண்டும் அதே இடத்திலிருந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம் எனப் பிரகாஷ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.