உலகம்

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. திணறும் நெதன்யாகு!

By Christon
29 Oct 2026, 09:31 AM
இஸ்ரேலில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இஸ்ரேலில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்காததால், ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தொங்கு நாடாளுமன்றம்: யாருக்கு எத்தனை இடங்கள்?

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. ஆனால், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகோட் (Likud) தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதேவேளையில், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 48 இடங்கள் கிடைத்துள்ளன.

இரண்டு கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரபு தலைமையிலான கட்சிகள் முன்னெப்பழுதும் இல்லாத வகையில் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தீர்மானிக்கும் சக்தியாக அரபு கட்சிகள்

இஸ்ரேல் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்காக உள்ள அரபு மக்களின் பிரதிநிதிகளாக 'ஜாயிண்ட் லிஸ்ட்' மற்றும் 'ராம்' (Ra'am) ஆகிய கட்சிகள் 19 இடங்களை வென்றுள்ளன. நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க ஐசன்கோட்டிற்கு இந்த அரபு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

இருப்பினும், அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதேநேரம், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள நெதன்யாகு, அரபு கட்சிகள் வெற்றி பெற்ற வாக்குச்சாவடிகளில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கல்கள்

நெதன்யாகு பக்கமிருக்கும் பல கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதேபோல், எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள அவிக்டார் லைபர்மேன் போன்ற தலைவர்கள் அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், இரு பிரதான தலைவர்களாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என முடிவெடுப்பார். ஒருவேளை எந்தவொரு கட்சியாலும் கூட்டணி அமைக்க முடியாவிட்டால், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்க நேரிடும்.

இதைத் தவிர்க்க, நெதன்யாகுமற்றும் ஐசன்கோட் இணைந்து 'தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை' (National Unity Government) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.