உலகம்

ISRAEL ELECTIONS: நெதன்யாகுவா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? அரபுக் கட்சிகளுடன் கைகோக்கும் எதிர்க்கட்சி?

By Sumalekha
28 Oct 2026, 12:30 PM
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்களை எந்தத் தரப்பு கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அரபுக் கட்சிகளின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இஸ்ரேலில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தல் இதுவாகும். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முதலில் வெளியான கணிப்புகளில், நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணியைவிட ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இதனால், இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால், பின்னர் வெளியான திருத்தப்பட்ட கணிப்புகள் நெதன்யாகுவுக்குச் சாதகமாக அமைந்தன. இருப்பினும், எந்தத் தரப்புக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்கள் உறுதியாகக் கிடைக்கவில்லை. இதனால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளையே சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

நெதன்யாகுவா, ஐசன்கோட்டா? கணிப்புகள் சொல்வது என்ன?

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை.

ஆரம்பகட்டத் தேர்தல் கணிப்புகளின்படி, நெதன்யாகுவுக்கு ஆதரவான கூட்டணிக்கு 50 இடங்களும், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 52 இடங்களும் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்புக்குமே பெரும்பான்மை கிடைக்காததால், சிறிய கட்சிகளின் ஆதரவு ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால், பின்னர் வெளியான கணிப்புகளில் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 59 இடங்கள் கிடைக்கலாம் என்றும், ஐசன்கோட் அணிக்கு 46 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசியல் களம் மீண்டும் நெதன்யாகுவுக்குச் சாதகமாகத் திரும்பியது.

இதுகுறித்துப் பேசிய நெதன்யாகு, இறுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும், லிகுட் கட்சியே நாட்டின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், யூத மக்களிடையேயும், நாட்டை ஆதரிப்பவர்களிடையேயும் வலதுசாரிக் கூட்டணிக்கு ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர், வலுவான தேசிய வலதுசாரி அரசு அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, இரண்டு முக்கிய அரபுக் கட்சிகளுக்கும் சேர்த்து 14 முதல் 15 இடங்கள் வரை கிடைக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு உறுதியானால், நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரிக்கும். நெதன்யாகுவின் லிகுட் கட்சியும், தீவிர வலதுசாரித் தலைவரான இடாமர் பென் க்விரின் கட்சியும் தேர்தல் பிரசாரத்தின்போது அரபுக் கட்சிகளைப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களாகச் சித்தரித்திருந்தன. இந்தப் பிரசாரங்களே அரபுக் கட்சிகளுக்கு ஆதரவு திரளக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அரபுக் கட்சிகளுடன் கைகோப்பாரா ஐசன்கோட்?

தேர்தல் கணிப்புகள் எந்தத் தரப்புக்கும் தெளிவான வெற்றியை உறுதிப்படுத்தாத நிலையில், ஆட்சியமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு முன்னால் இருக்கும் முக்கியமான வாய்ப்பு, அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதுதான். அரபு ஆதரவு கொண்ட ஜாயின்ட் லிஸ்ட் மற்றும் ராம் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.

இருப்பினும், தேர்தல் பிரசாரத்தின்போது அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் ஐசன்கோட் தரப்பு தயக்கம் காட்டியது. அரபுக் கட்சிகளுடன் இணைவது தங்களுக்குப் பின்னடைவாக அமையலாம் என எதிர்க்கட்சிகள் கருதியதே இதற்குக் காரணம்.

அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, அரபுக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவது எதிர்க்கட்சிகளுக்குக் கடினமாக இருக்கலாம். அதே நேரத்தில், தேர்தலுக்கு முன்பு அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அளித்த வாக்குறுதியிலிருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படலாம்.

அரசில் நேரடியாகப் பங்கேற்காமல், நாடாளுமன்றத்தில் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் வாய்ப்பும் அரபுக் கட்சிகளுக்கு உள்ளது. இதன் மூலம், நெதன்யாகு தலைமையிலான அரசை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு அவை உதவ முடியும்.

இதற்கு முன்னரும் இஸ்ரேல் அரசியலில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 1993-ம் ஆண்டு, ஒரு தீவிர மதவாதக் கட்சி அப்போதைய பிரதமர் யிட்சாக் ராபினின் கூட்டணியிலிருந்து விலகியது. அதன்பிறகும், அரபுக் கட்சிகளின் வெளிப்புற ஆதரவுடன் ராபின் அரசு சிறுபான்மை அரசாகத் தொடர்ந்து செயல்பட்டது. அப்போது ஒஸ்லோ அமைதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

61 இடங்களை எட்டுவாரா நெதன்யாகு?

தேர்தல் கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் லிகுட் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், அவரது கூட்டணிக்கு 61 இடங்கள் கிடைப்பது இன்னும் உறுதியாகவில்லை.

இறுதி முடிவுகள் ஓரிரு நாட்களில் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, லிகுட் கட்சியே மிகப்பெரிய கட்சி என்றும், வலதுசாரிக் கூட்டணிக்கு ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரபுக் கட்சிகளைச் சார்ந்திருக்காத வலுவான தேசிய வலதுசாரி அரசு அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், பெரும்பான்மையை எட்டுவதற்கான எண்ணிக்கைதான் அவருக்குச் சவாலாக உள்ளது. சில சிறிய வலதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் நுழைவதற்குத் தேவையான வாக்கு வரம்பை எட்டத் தவறியதாகக் கூறப்படும் நிலையில், அந்தக் கட்சிகளின் இடங்களை நம்பியும் நெதன்யாகுவால் ஆட்சியமைக்க முடியாது.

இதனால், தன்னுடன் இணைவதற்குச் சாத்தியமுள்ள கட்சிகளை அடையாளம் கண்டு, அவற்றின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் நெதன்யாகு உள்ளார்.

மீண்டும் தேர்தல் நடைபெறுமா?

நெதன்யாகுவோ, ஐசன்கோட்டோ யாராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அடுத்த சில மாதங்களில் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம். அதுவரை நெதன்யாகு தலைமையில் தான் அரசு தொடரும். அன்றாட அரசு நிர்வாகம் தொடர்ந்து நடைபெறலாம் என்றாலும், முக்கியமான கொள்கை மாற்றங்களை முன்னெடுப்பதில் கட்டுப்பாடுகள் இருக்கும்.

இறுதியில், நெதன்யாகு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 61 இடங்களைத் திரட்டுவாரா? அல்லது அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் ஐசன்கோட் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவாரா? இஸ்ரேலின் அடுத்த அரசு யார் தலைமையில் அமையும் என்பதைத் தீர்மானிக்கப் போவது வரும் நாட்களில் நடைபெறும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்தான்.