மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாதது என்றும், அந்தப் போரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இஸ்ரேல் தற்காலிக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டம்?
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய ராணுவத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின்போது, ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று நெதன்யாகு தெரிவித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா - இஸ்ரேல்?
ஈரான் மீதான அடுத்தகட்ட தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளின் ராணுவக் கட்டளைப் பிரிவு அதிகாரிகளும் தாக்குதல் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தாக்குதலை எப்போது தொடங்குவது என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்வி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க செனட்டில் நிராகரிக்கப்பட்ட மசோதா!
இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் முக்கிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஈரான் மீதான போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலைக் கட்டாயமாக்குவது தொடர்பான மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில் 51 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும், 48 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் மசோதா நிராகரிக்கப்பட்டது. இந்த முடிவு அமெரிக்காவின் ஈரான் தொடர்பான ராணுவக் கொள்கை குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அவசர முடிவு எடுக்க விரும்பாத டிரம்ப்!
மறுபுறம், ஈரான் விவகாரத்தில் அவசரமாக எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்த்த பிறகே அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்!
ஒருபுறம் ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர முடிவைத் தவிர்த்து வருகிறார்.
இஸ்ரேலின் ராணுவத் திட்டம், அமெரிக்காவின் நிலைப்பாடு, ஈரானின் அடுத்தகட்ட பதிலடி எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய போர் வெடிக்குமா என்ற அச்சம் சர்வதேச நாடுகளிடையே அதிகரித்துள்ளது.