இந்தியாவில் தற்போது மிட்-சைஸ் மற்றும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி (SUV) கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஏற்கனவே சந்தையில் இருக்கும் கைகர் (Kiger) மாடலுக்கு போதிய வரவேற்பு இல்லாததால், 'பிரிட்ஜர்' (Bridger) என்ற புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மீண்டும் ஒரு வலுவான முத்திரையைப் பதிக்க ரெனோ (Renault) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய ரெனோ பிரிட்ஜர் காரில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நான்கு விதமான பவர்ட்ரெயின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிகின்றன.
முதலாவதாக, 1.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இதன் முதன்மைத் தேர்வாக இருக்கும். இரண்டாவதாக, இதே இன்ஜினின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் பதிப்பும் வழங்கப்படவுள்ளது. மூன்றாவதாக, சுற்றுச்சூழல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு, டர்போ பெட்ரோல் இன்ஜினிலேயே இயங்கக்கூடிய சிஎன்ஜி (CNG) தொழில்நுட்பமும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.
நான்காவது தேர்வாக, 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட பவர்ட்ரெயின் அமையவுள்ளது. இந்த ஹைபிரிட் இன்ஜினை ரெனோ நிறுவனம் தனியாக உருவாக்காமல், 'ஹார்ஸ் பவர்ட்ரெயின்' என்ற நிறுவனத்திடம் இருந்து பெற்றுப் பயன்படுத்தவுள்ளது. பிரிட்ஜர் காரின் இந்த ஹைபிரிட் மாடல் ஒரு லிட்டருக்குச் சுமார் 30 கிமீ வரை மைலேஜ் தரும் என்பதால், மைலேஜ் பிரியர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் போட்டி மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, ஸ்கோடா கைலாக் (Kylaq) கார் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் மிகக் குறைந்த விலையில் வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், ரெனோவின் முந்தைய ஹிட் மாடலான டஸ்டரின் சாதனையை முறியடிக்கப் பிரிட்ஜருக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புதிய பிரிட்ஜர் காரின் ஆரம்ப விலை ரூ.6 லட்சம் முதல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.