இந்திய வாகனச் சந்தை மின்சார வாகனப் பயன்பாடு மற்றும் E20 பெட்ரோல் அறிமுகம் எனப் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் மைலேஜ் சற்றே குறைய வாய்ப்புள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், பழைய BS-III வாகனங்களில் சில பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
2005 ஏப்ரல் 1 முதல் 2016-க்குள் தயாரிக்கப்பட்ட BS-III வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை (gaskets) மாற்ற வேண்டி வரலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். வாகனங்களின் வழக்கமான சர்வீஸின் போதே இந்தப் பாகங்களை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் அமைப்பில் (fuel system) பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருட்கள் (elastomers), சாதாரண பெட்ரோலை விட E20 பெட்ரோலுடன் தொடர்பில் வரும்போது வேறுபட்ட மாற்றங்களைச் சந்திக்கின்றன. இவை முக்கியமாக ஓ-ரிங்க்ஸ் (O-rings), சீல்கள், எரிபொருள் குழாய்கள் (fuel hoses), கேஸ்கெட்டுகள் மற்றும் ஃபியூயல் பம்ப் பாகங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) நடத்திய ஆய்வின்படி, E20 பெட்ரோல் பயன்பாட்டினால் பழைய BS-III வாகனங்களின் பாகங்களில் அதிகப்படியான கடினத்தன்மை, பலவீனம், நெகிழ்வுத்தன்மை குறைதல் மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுவது தெரியவந்துள்ளது.
ரப்பர் பாகங்கள் கடினமடைவதால் அவை எளிதில் விரிசல் அடைய வாய்ப்புள்ளது. மேலும், இழுவிசை வலிமை (tensile strength) குறைவதால் பாகங்களின் தாங்குதிறன் பலவீனமடைகிறது. நெகிழ்வுத்தன்மை குறைவதும், எரிபொருளை உறிஞ்சி பாகங்கள் வீங்குவதும் (swelling) எரிபொருள் கசிவு மற்றும் சீலிங் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் எத்தனால் கலப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பழைய BS-III வாகனங்களின் எரிபொருள் அமைப்பு பாகங்கள் விரைவில் தேய்மானமடைய வாய்ப்புள்ளது. இதனால், வழக்கமான பராமரிப்பின் போது ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை அவ்வப்போது மாற்றுவது அவசியமாகிறது.