தொழில்நுட்பம்

அட்வென்ச்சர் ரக பைக் ப்ரியரா நீங்க..? இந்திய சந்தையில் அறிமுகமாகும் ஹிமாலயன் 440!

By Christon
15 Aug 2026, 08:05 PM
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.
அட்வென்ச்சர் ரக பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 மாடல், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது. லே பகுதியில் நடைபெறவுள்ள ஹிமாலயன் பேஸ்கேம்ப் நிகழ்வில், ஹிமாலயன் 411 அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இப்புதிய பைக் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கடந்த 2023 நவம்பரில் சந்தையிலிருந்து விலக்கப்பட்ட பழைய ஹிமாலயன் 411 மாடலின் வடிவமைப்பு மற்றும் ஓட்டுதல் அனுபவத்திற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது, பழைய 411 மாடலின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு, நவீன அம்சங்களுடன் இந்த புதிய ஹிமாலயன் 440 உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ராம் 440 மாடலின் சேஸீ மற்றும் பாகங்களை அடிப்படையாகக் கொண்ட இப்பைக்கில் 443சிசி ஏர்-ஆயில் கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 25.4பிஎச்பி பவரையும், 34என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸையும் கொண்டுள்ளது.

மேலும், 21 அங்குல முன்சக்கரம், 17 அங்குல பின்சக்கரம், 200 மிமீ டிராவல் ஃபோர்க்குகள் ஆகியவற்றுடன் ட்யூப் டயர்கள் வழங்கப்படுகின்றன. டிஎஃப்டி டிஸ்ப்ளே, நேவிகேஷன் வசதி மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள ஸ்க்ராம் 440 (ரூ. 2.25 லட்சம்) மற்றும் ஹிமாலயன் 450 (ரூ. 3.10 லட்சம்) ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்ட விலையில், ஹிமாலயன் 450-ஐ விடக் குறைந்த விலையுள்ள தேர்வாக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.