மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் இன்று (அக்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.
மிதமான மழை
இந்த நிலையில், இன்றும் நாளையும் (அக்.30) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அக்.31: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.