தமிழ்நாடு

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

By Sumalekha
28 Jun 2026, 10:00 AM
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி ருவள்ளூரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் ஏராளமான தொழிலாளர்களின் நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் கிட்டத்தட்ட வெந்துபோய்விட்டன. அவர்களில் எட்டு பேர் துள்ளத்துடிக்க உயிரிழந்துவிட்டார்கள். தனியார் நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தக் கொடூர விபத்து சென்னை சுற்றுவட்டாரத்தையே கதிகலங்கச் செய்திருக்கிறது!

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், "திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் செயின்ட் பீட்டர் பவுல் எனும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. மோகன், ஜோசப் ஜெகன் ஆகியோர் இதன் உரிமையாளர்கள். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெண் ஊழியர்கள் இங்கு அதிகம். இறால் பதப்படுத்தும்போது கெட்டுப்போகாமல் இருக்க ஜீரோ டிகிரி செல்சியஸில் ஏ.சி. இங்கு பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைக்கு வெளியே அமோனியா டேங்க் வைக்கப்பட்டு அமோனியா வாயு உள்ளே அனுப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 21ம் தேதி ஞாயிறு காலை, சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரபரப்பாக பணியில் ஈடுபட்டிருந்தனர். மேல் மாடியில் 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அமோனியா குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு, அமோனியா வாயு சரசரவென பரவியது.

குறிப்பாக, தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுகூட தெரியவில்லை. சுமார் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூக்கு மற்றும் வாயில் ரத்தம் கொட்டியது. தொண்டைக்குழி, நுரையீரல், இதயம் என உடல் உறுப்புகள் பற்றி எரிவதுபோல் வலியை ஏற்படுத்த, தொழிலாளர்கள் அலறி துடித்தார்கள். பரவுவது கெமிக்கல் வாயு எனத் தெரியாமல் தொழிலாளர்கள் மேலும் மூச்சை வேகமாக உள்ளே இழுக்க, அது மூச்சுக்குழாயையும், நுரையீரலின் அடிப்பகுதியையும் மேலும் கடுமையாக பாதித்திருக்கிறது. உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட, அவர்கள் ஆம்புலன்ஸ்களை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

அரக்கோணத்திலிருந்தும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் எட்டு பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளனர். அரசு இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கெமிக்கல்கள் பயன்படுத்தப்படும் இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் முறையாக அனுமதி அளித்திருக்கின்றனவா, அனுமதியை புதுப்பித்திருக்கிறார்களா என சோதிக்க வேண்டும்.

வடசென்னையில் துறைமுகம் இருப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நடக்கிறது. இதனால் இங்கு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், உணவு பாதுகாப்பு கிடங்குகள் அதிகம். பலர் பெரிய, பெரிய கிடங்குகள் கட்டி வாடகைக்கும் விட்டுள்ளனர். இதற்கெல்லாம் போதிய இடவசதி இருக்கின்றனவா, ஏதேனும் அசம்பாவிதங்கள் என்றால் அவசர வழியில் தப்பிக்க வழிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவா என கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

பல நிறுவனங்களுக்கு, விண்ணப்பம் கிடைத்த அன்றே அதிகாரிகள் அனுமதிச் சான்று கொடுத்துவிட்டு கவர் வாங்கிச் சென்றுவிடுகின்றனர். இதைவிடக் கொடுமையாக, சில துறைகளின் புதுப்பித்தல் சான்றிதழின் மதிப்பு காலத்தை ஒரு ஆண்டு இருந்ததை மூன்று ஆண்டுகள் வரை மாற்றிவிட்டார்கள்.

அதேசமயம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு ஆண்டுக்கு இவ்வளவு தொகை என்று மொத்தமாக கணக்கிட்டு வசூலித்துவிடுகிறார்கள். இப்படியிருந்தால் எங்கிருந்து அரசு விதிகள் கடைபிடிக்கப்படும்" என்றார்கள் ஆதங்கத்துடன்.

இந்த சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் இடைக்கால அறிக்கையும், மூன்று நாளில் விரிவான அறிக்கையும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன் பலியானவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா மற்றும் எஸ்.பி. சாய்பிரனீத்திடம் கருத்து கேட்க முயற்சித்தோம். யாரும் நமக்கு விளக்கம் தர முன்வரவில்லை. தொடர்ந்து திருவள்ளூர் த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் அருண்குமாரிடம் பேசினோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, முதலுதவி போன்ற சேவைகள் கிடைக்கிறதா என கவனித்துவருகிறோம். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மற்றவற்றை அரசு அறிவிக்கும்" என்றார். முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்துக்கு அப்பாவி உயிர்கள் இரையாவது மன்னிக்க முடியாத குற்றம்.