குழந்தைகள் தினம் 2026-ஐ முன்னிட்டு, தயார் நிலையில் உண்ணக்கூடிய பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்பாஞ்ச் வகை கேக்குகளை விநியோகிப்பதற்கான மின்-ஒப்பந்தம் கோரப்பட்டது. இதையடுத்து, நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நான்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
எந்த நிறுவனத்துக்கு எவ்வளவு ஆர்டர்?
1. ட்ரீம் பேக் (Dream Bake)
அதிகபட்சமாக 33,87,459 கேக் துண்டுகளை வழங்க ட்ரீம் பேக் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.0.24 என்ற விலையில், ஜிஎஸ்டி உட்பட ஒப்பந்த மதிப்பு ரூ.3,84,13,785 ஆகும்.
பழ வகை கேக், சாக்லேட் கேக், மார்பிள் கேக் மற்றும் ஸ்விஸ் ரோல் வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
2. எலைட் நேச்சுரல் (Elite Natural)
இந்த நிறுவனத்துக்கு 10,06,861 கேக் துண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமுக்கு ரூ.0.24 என்ற விலையில், ஜிஎஸ்டி உட்பட ஒப்பந்த மதிப்பு ரூ.1,14,17,804 ஆகும்.
வெண்ணிலா மற்றும் சாக்லேட் ஸ்லைஸ் கேக்குகள் வழங்கப்பட உள்ளன.
3. பிரிட்டானியா (Britannia)
பிரிட்டானியா நிறுவனத்துக்கு 10,03,996 கேக் துண்டுகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.0.27 என்ற விலையில், ஜிஎஸ்டி உட்பட ஒப்பந்த மதிப்பு ரூ.1,28,08,478.97 ஆகும்.
சாக்லேட், பழ வகை, அன்னாசி, ஆரஞ்சு, வெண்ணெய் மற்றும் பால் சுவைகளில் கேக்குகள் வழங்கப்பட உள்ளன.
4. ஐடிசி (ITC)
ஐடிசி நிறுவனத்துக்கு 8,48,096 யூனிட் கேக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமுக்கு ரூ.0.28 என்ற விலையில், ஜிஎஸ்டி உட்பட ஒப்பந்த மதிப்பு ரூ.1,07,71,498 ஆகும்.
ஒவ்வொரு யூனிட்டிலும் 21.6 கிராம் எடையுள்ள இரண்டு சாக்லேட் ஸ்விஸ் ரோல் துண்டுகள் என மொத்தம் 43.2 கிராம் கேக் வழங்கப்பட உள்ளது.
எந்தெந்த சுவைகளில் கேக்குகள் வழங்கப்படும்?
ஒப்பந்த ஆவணங்களின்படி, நிறுவனங்களைப் பொறுத்து வெவ்வேறு வகையான கேக்குகள் வழங்கப்பட உள்ளன. வெண்ணிலா, சாக்லேட், பழ வகை கேக், மார்பிள் கேக் மற்றும் ஸ்விஸ் ரோல் வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
எலைட் நேச்சுரல் நிறுவனம் வெண்ணிலா மற்றும் சாக்லேட் ஸ்லைஸ் கேக்குகளை வழங்குகிறது. ட்ரீம் பேக் நிறுவனம் பழ வகை, சாக்லேட், மார்பிள் மற்றும் ஸ்விஸ் ரோல் வகை கேக்குகளை வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளது.
எப்போது விநியோகம்?
ஒப்பந்தக் கடிதங்களின்படி, கேக் விநியோகம் நவம்பர் 9, 2026 முதல் தொடங்கி, நவம்பர் 11-ம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும். மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொடர்புடைய கிடங்குகளுக்கு கேக்குகள் கொண்டு சேர்க்கப்பட உள்ளன.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரே வகையான கேக் மட்டும் வழங்கும் வகையில் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் ஒப்பந்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்காக ரூ.7.54 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கொள்முதல் ஒப்பந்தம் கவனம் பெற்றுள்ளது.