பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஸ்ரீலங்காவின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 4.5 கிமீ உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது" என அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வீசக்கூடும்.
இதனால், தமிழகத்தின் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, 9 மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், அதாவது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதன்பின், ஏனைய தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக சென்னையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நேற்றிரவு முதல் இன்று விடியற்காலை வரை சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்துவந்த நிலையில், அதுபோல இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்பதால் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் "குமரிக்கடலின் சில பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்." இதனால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி, 06-08-2026 மற்றும் 07-08-2026 அடுத்த இருநாட்களில் தேனீ மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மலை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.