தமிழ்நாடு

காலையிலேயே ஷாக் நியூஸ்.. சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

By Christon
01 Oct 2026, 07:39 AM
19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியன்றும் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 1-ஆம் தேதியான இன்று சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால், சென்னையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த வணிகச் சிலிண்டரின் விலை உயர்ந்து, தற்போது ரூ.2,983 முதல் ரூ.2,984 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வணிகச் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் ரூ.10.50 உயர்த்தப்பட்டு ரூ.2,916.50-ஆக விற்பனையான நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வணிகச் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள் மற்றும் கேன்டீன்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்குச் சமையல் எரிவாயுவுக்கான செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அத்தியாவசியச் சமையல் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தச் சிலிண்டர் விலை உயர்வு வணிகர்களுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவகங்களில் உணவுகளின் விலை உயரும் சூழலும் உருவாகியுள்ளது.

வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது வழக்கம் போல் மாற்றமின்றி ரூ.957.50-க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.