தமிழ்நாடு

தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.. இருளில் மூழ்கிய அமைச்சர்கள் அறை!

By Christon
12 Oct 2026, 12:14 PM
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிப் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகப் பொதுமக்கள் சந்தித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுப் பிரச்னை, தற்போது அரசின் தலைமைச் செயலகம் வரை எதிரொலித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சர்களான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட பலரது அறைகள் இருளில் மூழ்கின.

முக்கிய நிர்வாக மையத்திலேயே ஏற்பட்ட இந்தத் திடீர் மின்சாரத் தடையால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மின்தடைக்கான காரணம் குறித்து மின்சார வாரிய ஊழியர்கள் தற்போது தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் பருவநிலை மாறுபாடு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு காரணமாகவே இந்த மின் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது. நிலமையைச் சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கூடுதலாகக் கொள்முதல் செய்யத் தமிழக மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

பொதுக்கூட்டங்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வந்த சூழலில், தற்போது தலைமைச் செயலகத்திலேயே மின்தடை ஏற்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. "தலைமைச் செயலகத்திற்கே இந்த நிலையா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.