தமிழ்நாடு

இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுனருடன் முதல்வரின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

By Christon
16 May 2026, 01:41 PM
தமிழக முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து, இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புக்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த முக்கியக் கோப்புகளைத் தமிழக அரசு ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளது.

கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராக ஜோசப் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். எனினும், பதவியேற்று 6 நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாததால் பல்வேறு அரசுப் பணிகளின் கோப்புகள் தேக்கமடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநரிடம் இலாகா ஒதுக்கீடு குறித்த பட்டியல் இன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநருடன் அவசரச் சந்திப்பு

கேரளா சென்றிருந்த தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நேற்று மாலை சென்னை திரும்பினார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை ஆளுநரை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார், அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்புகளைச் சமர்ப்பித்தார். இன்னும் சில மணி நேரங்களில் 9 அமைச்சர்களின் இலாகா விவரங்கள் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?

இன்று மாலை மீண்டும் கேரளா செல்லும் ஆளுநர், அங்கு திங்கட்கிழமை நடைபெறவுள்ள புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவை நடத்தி வைக்க உள்ளார். அதன்பின்னரே அவர் சென்னை திரும்புகிறார். எனவே, ஆளுநர் சென்னை திரும்பிய பிறகு, அதாவது அடுத்த இரண்டு தினங்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்திற்கான புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.