தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த புகாரில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த இருவரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்தியர்கள் சட்டவிரோதமாக வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில், விரலில் தேர்தல் மை இருந்ததைக் கொண்டு இருவர் சிக்கியுள்ளனர்.
திருச்சி துறையூரைச் சேர்ந்த சந்திர சேகர ரகுபதி, ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்து, ஏப்ரல் 23-ஆம் தேதி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தனது பழைய இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளார். நேற்று அவர் மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோது, அவரது விரலில் இருந்த தேர்தல் மையைக் கண்டு அதிகாரிகள் சந்தேகித்தனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக வாக்களித்தது உறுதியானதை அடுத்து, விருகம்பாக்கம் போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஜிதேந்திரநாத் என்பவர், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கனடாவில் வசித்து வருகிறார். தனது சகோதரர் திருமணத்திற்காகச் சென்னை வந்திருந்த அவர், தி.நகர் தொகுதியில் வாக்களித்துள்ளார். கனடா திரும்ப விமான நிலையம் சென்றபோது அதிகாரிகளிடம் சிக்கிய அவர் மீது கே.கே. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.