தமிழ்நாடு

தப்பியோடிய கைதிகள்.. நள்ளிரவில் போலீஸ் செய்த சம்பவம்.. 4 பேருக்கு வலைவீசி!

By Christon
28 Oct 2026, 09:44 AM
தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய 17 விசாரணை கைதிகளில், இதுவரை 13 பேரைப் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிபட்ட 13 பேரில் முதற்கட்டமாக பிரவீன், ராஜா சிக்கந்தர், சிலம்பரசன், ராஜ்குமார், லிங்க பிரசாத் ஆகிய 5 கைதிகள் நேற்று (அக்.27) நள்ளிரவில் ஆண்டிபட்டி நீதிமன்ற நீதிபதி எழில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன், தப்பியோடிய சம்பவம் தொடர்பாகக் கண்டமனூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, சிறைக் காவலரைத் தாக்கிச் சங்கிலி பறித்தது உள்ளிட்ட 7 புதிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 10 வரை காவல்

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, இந்த 5 கைதிகளையும் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி எழில் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீண்டும் தேக்கம்பட்டி சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

தேடுதல் வேட்டை

பிடிபட்ட மேலும் 8 கைதிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அவர்கள் மீது புதிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதனிடையே, இன்னும் தலைமறைவாக இருக்கும் எஞ்சிய 4 கைதிகளைப் பிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.