பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ் மற்றும் மதன் ராஜா ஆகியோர் நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
திட்டமிட்ட மின்தடை
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அரசு சார்ந்த நிகழ்வுகளில், மின்துறைக்குள் இருக்கும் சில நபர்கள் வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்துகின்றனர்," என்று குற்றம் சாட்டினார். துறையின் பொறுப்பில் இருப்பதால் இதைப் பற்றி அதிகமாகப் பேச முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சிக்கலைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் நீண்ட காலமாகத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மின் கொள்முதல்
அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த புகார்களுக்குப் பதிலளித்த அவர், "அதிக விலைக்கு மின்சாரம் இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை; அதற்கான டெண்டர் மட்டுமே விடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்துச் செயல்படுவதால், அடுத்த வாரம் மீண்டும் டெண்டர் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார். மேலும், மின் தட்டுப்பாடு என்பது தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலவி வரும் பொதுவான பிரச்னையாக உள்ளது என்றும் விளாக்கமளித்தார்.
சிறை பாதுகாப்பு குறைபாடுகள்
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் குறித்துப் பேசிய அவர், சிறைகளில் நிலவும் பாதுகாப்பு குளறுபடிகளைப் பயன்படுத்தி கைதிகள் தப்பியுள்ளதாக ஒப்புக் கொண்டார். இதில் தேனி சிறைக் கண்காணிப்பாளருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், சிறைகளின் பாதுகாப்பை மேம்படுத்தக் கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்துக் குறைபாடுகளும் சரிசெய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.