தமிழ்நாடு

காவல்நிலைய மரணம்: CCTV காட்சிகளை கசியவிட்டது யார்? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

By Christon mano
17 Nov 2026, 06:09 PM
லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் நான்கு காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளைச் சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா ஆகிய நான்கு காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளின் இரண்டு நகல்களைச் சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி சுதா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில், விசாரணைக்குச் சென்ற தனது கணவர் காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், அவரது உடற்கூராய்வு அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்பிற்கு முன்பாக அவர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டதற்கு இதுவே சாட்சி எனத் தெரிவித்த அவர், கணவரின் உடல் அகற்றப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நான்கு காவல் நிலையங்களின் சிசிடிவி பதிவுகளைப் பாதுகாத்து நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எந்த சம்மனும் இன்றி விசாரணைக்கு அழைக்கப்பட்ட பாலகிருஷ்ணன், தனது சட்டையால் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுவதாகவும், சிசிடிவி காட்சிகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

வழக்கு ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நேரத்தையும், முதல் தகவல் அறிக்கையில் (FIR) உள்ள டிஜிட்டல் கையெழுத்தின் நேரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பாலகிருஷ்ணன் உயிரிழந்த சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 3-ஆம் தேதி லாரி தீப்பற்றிய விபத்து தொடர்பாக டெலிவரி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதாகவும், கண்டெய்னரில் இருந்த 162 ஏலக்காய் மூட்டைகளில் 67 மூட்டைகள் மாயமானதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதி, முறையாக விசாரித்திருந்தால் மாயமான மூட்டைகளைக் காவல்துறையினரே கண்டுபிடித்திருக்கலாமே எனத் தெரிவித்தார்.

மேலும், வாலாந்தூர் மற்றும் செக்கானூரணி காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலைய காட்சிகள் டிஎஸ்பியால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்கினால் சிபிசிஐடி விசாரணை பாதிக்கப்படும் என அரசுத் தரப்பு வாதிட்டபோது, குறுக்கிட்ட நீதிபதி, "அவ்வாறெனில் குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டும் ஊடகங்களில் வெளியானது எப்படி? அதிகாரிகளின் அனுமதியின்றி காட்சிகள் வெளியாக வாய்ப்பில்லை; அவற்றைக் கசியவிட்ட அதிகாரி யார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா ஆகிய நான்கு காவல் நிலையங்களின் 13 மற்றும் 14-ஆம் தேதிகளுக்கான சிசிடிவி காட்சிகளின் இரண்டு நகல்களைச் சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 20 ஆம் தேதி ஒத்திவைத்தார்.