புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் முதல்வர் அலுவலகத்தை நிர்வாக வசதிக்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முதல்வர் அறை மற்றும் அலுவலர்களுக்கான வசதிகளை அமைப்பதற்காகத் தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.5.54 கோடியில் டெண்டர் கோரப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெண்டர் பிரிக்கப்பட்ட விவரங்கள்
சென்னை சேப்பாக்கம் கட்டிடக் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டம்-1 கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் சார்பில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி:
பிளாக் 1: நிர்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்த ரூ.2.41 கோடி
பிளாக் 2: உள் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.2.01 கோடி
பிளாக் 3: இதர பணிகளுக்காக ரூ.1.12 கோடி
என மொத்தம் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் செயல்பாட்டில் விதிமீறல்கள்
தற்போது இந்த டெண்டர் நடைமுறையில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 13-ஆம் தேதி நாளிதழ்களில் இதற்கான விளம்பரம் வெளியான நிலையில், 4 நாட்கள் கழித்து ஆகஸ்ட் 17-ஆம் தேதியே இணையதளத்தில் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரூ.2 கோடிக்கு அதிகமான மதிப்புடைய டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இந்த டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆவணக் குறைபாடுகள்
பொதுவாக ரூ. 50 லட்சத்திற்கு மேற்பட்ட டெண்டர்கள் இணையத்தில் வெளியிடப்படும் போது அதன் மொத்த மதிப்பைக் குறிப்பிட வேண்டும். நாளிதழ் விளம்பரத்தில் ரூ. 5.54 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இணையதளத்தில் வெளியான ஆவணங்களில் தொகைக் குறித்த விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதாக அறிவித்த தமிழக வெற்றிக் கழக அரசின் முதல்வர் அலுவலகப் பணிக்கான டெண்டரிலேயே இத்தகைய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.