தமிழ்நாடு

அரசு மரியாதையுடன் பாக்கியராஜ் உடல் தகனம்... கண்ணீருடன் விடை கொடுத்த திரையுலகம்!

By Sumalekha
27 Jun 2026, 08:27 PM
தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளரான இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்கியராஜின் உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மாரடைப்பு காரணமாக நேற்று காலமான பாக்கியராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகர், எழுத்தாளர், வசனகர்த்தா என பல துறைகளில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் பாக்கியராஜ். எளிய மக்களின் வாழ்க்கையை இயல்பான முறையில் திரையில் பதிவு செய்த அவரது படைப்புகள், தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.

பாக்கியராஜின் மறைவு செய்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். தந்தையை இழந்த சோகத்தில் இருந்த மகன் சாந்தனு மற்றும் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்தனர்.

முன்னதாக தமிழக அரசு அறிவித்தபடி, அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி நிகழ்வில் பாக்கியராஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் 27 காவலர்கள் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவுக்கு தனது தனித்துவமான படைப்புகள் மூலம் அழியாத பங்களிப்பை வழங்கிய பாக்கியராஜுக்கு, ரசிகர்களும் திரையுலகமும் கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.