தமிழ்நாடு

2 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! RBI வரம்பைத் தாண்டிய பணவீக்கம்.. தமிழ்நாடுதான் டாப்!

By Christon mano
13 Nov 2026, 09:41 AM
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7.29 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டி 6.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் 7.29 சதவீத பணவீக்கத்துடன் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தற்காலிகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 5.54 சதவீதமாக இருந்த நாட்டின் சில்லறை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2024 அக்டோபருக்குப் பிறகு பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

குறிப்பாக, உணவு மற்றும் பானங்களுக்கான பணவீக்கம் 8.5 சதவீதமாகவும், எரிபொருள் மற்றும் போக்குவரத்து 5.84 சதவீதமாகவும், ஆடை மற்றும் காலணி 4.96 சதவீதமாகவும், கல்விக்கான பணவீக்கம் 4.02 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. காய்கறிகளைப் பொறுத்தவரை உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தேங்காய், கத்திரிக்காய் ஆகியவற்றின் விலை குறைந்துள்ள போதிலும், வெங்காயத்தின் விலை 116.22 சதவீதமும், பூண்டு விலை 60.74 சதவீதமும் கடுமையாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் 6.81 சதவீதமாக இருந்த பணவீக்கம், அக்டோபரில் 7.29 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில்தான் விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. தேசிய அளவில் கிராமப்புற பணவீக்கம் 6.63 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாடு கிராமப்புறங்களில் இது 7.86 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் தேசிய சராசரி 5.41 சதவீதமாக இருக்க, தமிழ்நாட்டில் 6.84 சதவீதமாக உள்ளது.

இருப்பினும், மற்ற தென் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பணவீக்க உயர்வு 0.48 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

நாட்டிலேயே தென் மாநிலங்களில்தான் விலைவாசி உயர்வு அதிகமாகக் காணப்படுகிறது. யூனியன் பிரதேசங்கள் தவிர்த்து, அதிக பணவீக்கம் பதிவான முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு (7.29%) முதலிடத்திலும், தெலங்கானா (7.26%) இரண்டாமிடத்திலும், ஆந்திரப் பிரதேசம் (7.25%) மூன்றாமிடத்திலும் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம் (7.19%), ஒடிசா (7.17%), கர்நாடகா (7.07%), உத்தரப் பிரதேசம் (6.47%), கேரளா (6.22%), சத்தீஸ்கர் (5.99%) மற்றும் ஜார்க்கண்ட் (5.90%) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.