விளையாட்டு

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு!

By Christon
06 Jun 2026, 03:01 PM
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த சூர்யகுமார் யாதவ், அவரது தற்போதைய மோசமான ஆட்டத்திறன் காரணமாகக் கேப்டன் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஐபிஎல் தொடரில் தனது சிறந்த தலைமைப் பண்பை நிரூபித்த ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல், எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் திலக் வர்மா புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

இந்த அணித் தேர்வில் மிகப்பெரிய ஆச்சரியமாக, பீகாரைச் சேர்ந்த 15 வயது இடதுகை பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி முதல்முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்திய ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற இவர், இதன் மூலம் சர்வதேச இந்திய டி20 அணியில் இடம் பிடித்த மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். மேலும், 16 வயதில் இந்திய அணியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து வைபவ் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இளமையும் அனுபவமும் கலந்த அணிகள்

அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுமே இளமையும் அனுபவமும் கலந்த சமநிலையுடன் காணப்படுகின்றன. ஆல்-ரவுண்டர்களாக சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளது அணிக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.