விளையாட்டு

“வலிமையாக இரு லியோ” - மெஸ்ஸிக்கு ஆறுதல் கூறிய ரொனால்டோ

By Christon
13 Aug 2026, 10:52 AM
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 68வது வயதில் அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உயிரிழந்தார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக மெஸ்ஸி சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டார். அதில் தனது தந்தையுடனான நினைவுகளையும், தனது கால்பந்து பயணத்தில் அவர் ஆற்றிய முக்கிய பங்கையும் மெஸ்ஸி நினைவுகூர்ந்தார்.

குறிப்பாக, இன்னொரு உலகக் கோப்பையில் தான் விளையாட வேண்டும் என்பது தனது தந்தையின் ஆசையாக இருந்ததாக மெஸ்ஸி தெரிவித்தார். 2026 உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் குணமடைந்து போட்டியை நேரில் காண வருவார் என தனது தாயார் தொடர்ந்து நம்பிக்கை அளித்ததாகவும் கூறினார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அந்தப் போட்டியை தனது தந்தை நேரில் காண வேண்டும் என்பதையே தனது முக்கிய இலக்காகக் கொண்டிருந்ததாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் தனது தந்தையிடமிருந்து வரும் மெசேஜுக்காக காத்திருந்ததாகவும், அவை வராமல் போனபோதுதான் அவரது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை உணர்ந்ததாகவும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

“என்னால் முடிந்தவரை முன்னேற வேண்டும், உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் கொடுக்க வேண்டும், நான் விளையாடும் ஒரு போட்டியையாவது நீங்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது” என்ற வகையில் தனது உணர்வுகளை மெஸ்ஸி பகிர்ந்துள்ளார்.

அர்ஜென்டினா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்றபோதும், ஜார்ஜால் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. தனது தந்தைக்காக உலகக் கோப்பையை வென்று அந்தக் கோப்பையை அவரிடம் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், ஆனால் உடல் ஒத்துழைக்காததால் தன்னால் முடிந்ததைச் செய்ய முடியவில்லை என்றும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சாம்பியனாகவில்லை அப்பா... ஆனால் ஒவ்வொரு போட்டியையும் எவ்வளவு ரசித்தோம் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் சொன்னது மீண்டும் சரியாகிவிட்டது; நான் அங்கே சென்று விளையாட வேண்டும் என்று நீங்கள் எப்போதும் கூறியதைப் போல” என மெஸ்ஸி தனது தந்தையை நினைவுகூர்ந்தார்.

மெஸ்ஸியின் இந்த உருக்கமான பதிவுக்கு பதிலளித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, “இந்த கடினமான தருணத்தில் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகப்பெரிய அரவணைப்பு, லியோ. வலிமையாக இரு” என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக களத்தில் போட்டியாளர்களாக இருந்த மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ, தனிப்பட்ட துயரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கும் இந்த தருணம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.