விளையாட்டு

நைட் கிளப் மோதல் சர்ச்சை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு?

By Christon
10 Jun 2026, 01:02 PM
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள நைட் கிளப் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சர்ச்சையைத் தொடர்ந்து, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, கடந்த ஜூன் 8 திங்கள்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் ஆகியோர் லண்டனில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றுள்ளனர். அங்கு ஒரு ரக்பி வீரருடன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அணியின் ஒழுக்க விதிகளை மீறியதாக எழுந்த இந்தக் குற்றச்சாட்டு குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

நெருக்கடி கொடுக்கும் கிரிக்கெட் வாரியம்

இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 35 வயதான பென் ஸ்டோக்ஸ் தனது கேப்டன் பதவியிலிருந்து தானாக முன்வந்து விலக வேண்டும் அல்லது வாரியமே அவரை நீக்கும் என்று நெருக்கடி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு விலகினால் சாதாரண வீரராகத் தொடர வாரியம் அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனையால் வாரியத்துடன் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கேப்டன் பதவியை மட்டும் ராஜினாமா செய்வதற்குப் பதிலாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தே முழுமையாக ஓய்வு பெற்றுவிடலாம் என்று பென் ஸ்டோக்ஸ் தீவிரமாக யோசித்து வருகிறார்.

முன்னாள் வீரர் ஆதரவு

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். முழு உண்மையும் வெளிவரும் வரை எந்த முடிவிற்கும் வரக்கூடாது என்றும், மிகவும் நேர்மையானவரான ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகிய இரு வீரர்களின் மன நலனை இந்த நேரத்தில் அணி நிர்வாகம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 17 அன்று நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்த சர்ச்சை இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.