விளையாட்டு

IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை: சுப்மன் கில்லை முந்திய ரிஷப் பண்ட்!

By Christon
19 Aug 2026, 08:40 AM
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கேப்டன் சுப்மன் கில்லைப் பின்னுக்குத் தள்ளி பண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 66 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 41 போட்டிகளில் விளையாடி மொத்தம் 2,885 ரன்களுடன் இந்திய அளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த சுப்மன் கில் 41 போட்டிகளில் 2,867 ரன்களுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். இத்தொடரில் உலகளவில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 6,651 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ரன்கள் மட்டுமின்றி சிக்ஸர்கள் அடிப்பதிலும் பண்ட் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், வெறும் 51 போட்டிகளில் இலைக்கை எட்டியதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்த உலக அதிவேக வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் (138 சிக்ஸர்கள்), பிரெண்டன் மெக்கல்லம் (107 சிக்ஸர்கள்) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்களும், இலங்கை 284 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 193 ரன்கள் எடுக்க, இலங்கைக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆடிவரும் இலங்கை அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.