விளையாட்டு

IPL 2027: மும்பை அணியின் BATTING COACH-ஆக நியமிக்கப்பட்ட Ex. CSK வீரர்!

By Christon
30 Oct 2026, 12:11 PM
மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் 2027 தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவை முழுமையாக மறுசீரமைத்துள்ளது. இதில் முன்னாள் இந்திய வீரரும் சி.எஸ்.கே மற்றும் கே.கே.ஆர் அணிகளுக்காக விளையாடி ஐ.பி.எல் கோப்பை வென்றவருமான ராபின் உத்தப்பா மும்பை அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 9-வது இடம்பிடித்த மும்பை அணி, நிர்வாக அளவில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. முன்னதாக பேட்டிங் பயிற்சியாளராக இருந்த பொலார்ட், தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காலியான பேட்டிங் பயிற்சியாளர் இடத்திற்கு ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2008 ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய உத்தப்பா, தற்போது மீண்டும் அதே அணிக்குக் பயிற்சியாளராகத் திரும்பியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேட் செய்தது. அந்த ஆண்டு ராபின் உத்தப்பா ஒரு சில ஆட்டங்களில் சிறப்பான விளையாடினாலும் அவர் அணியில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அதனையடுத்து, 2024 ஆம் ஆண்டு சா்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்தார்.

பேட்டிங் பயிற்சியாளருடன் சேர்த்து மற்ற முக்கியப் பொறுப்புகளுக்கும் முன்னாள் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மும்பை அணிக்காக 4 முறை கோப்பை வெல்ல உதவிகரமாக இருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மெக்லெனகன், பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து, சமீபத்திய டி20 உலகக்கோப்பை வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய டி. திலீப் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார். மேலும், மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவாப் குல்கர்னி, இளம் பந்துவீச்சாளர்களை உருவாக்கும் 'வளர்ச்சிப் பிரிவு' பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாக இருந்த லசித் மலிங்கா, பாராஸ் மாம்ப்ரே மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் காரல் ஹாப்கின்சன் ஆகியோர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 16 ஆண்டுகளாக மும்பை அணியுடன் பயணித்து வரும் பொலார்ட் தலைமையில், சர்வதேச அனுபவமும் சொந்த அணியின் முன்னாள் வீரர்களின் பங்களிப்பும் கொண்ட புதிய பயிற்சியாளர் குழுவுடன் மும்பை அணி அடுத்த தொடரை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.