விளையாட்டு

IND vs NZ 4thT20: 3 தோல்விகளுக்கு பழிவாங்கிய நியூசி. அணி! கிளென் பிலிப்ஸ் அதிரடியில் மூழ்கிய இந்தியா!

By Santhosh
30 Oct 2026, 05:50 PM
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டம், பந்துவீச்சு மற்றும் சாதனை எனப் பல்வேறு திருப்பங்களுடன் ஆட்டம் விறுவிறுப்புடன் அமைந்து கவனம் பெற்றுள்ளது.

முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த நியூசிலாந்து அணி, நான்காவது டி20 போட்டியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. கிளென் பிலிப்ஸின் அதிரடி சதம், மைக்கேல் பிரேஸ்வெல்லின் ருத்ரதாண்டவம், ஜேக்கப் டஃபியின் மிரட்டலான பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணி, இந்தியாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் மிட்செல் சாண்ட்னர் படைத்துள்ளார்.

முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா ஆதிக்கம்!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யவன்ஷிக்குப் பதிலாக இஷான் கிஷனும், புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக மயங்க் யாதவும் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணி மாற்றமின்றி களமிறங்கியது.

ஆரம்பத்தில் தடுமாறிய நியூசிலாந்து!

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. தொடக்க வீரர் டிம் செய்பர்ட் 3 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய பின் ஆலன் 17 பந்துகளில் 31 ரன்களும், டேரில் மிட்செல் 9 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். பிவோன் ஜேக்கப்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் நியூசிலாந்து அணி குறைந்த ரன்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.

பிலிப்ஸ் - பிரேஸ்வெல் ஜோடியின் அதிரடி ஆட்டம்!

ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த இந்த இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர்.

குறிப்பாக, கிளென் பிலிப்ஸ் இந்திய பந்துவீச்சைச் சிதறடித்து ரன் வேட்டையில் ஈடுபட்டார். மறுபுறம் மைக்கேல் பிரேஸ்வெல்லும் அவருக்கு இணையாக அதிரடி காட்டினார். இந்த ஜோடி வெறும் 40 பந்துகளில் 115 ரன்களைக் குவித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.

46 பந்துகளில் சதம் விளாசிய கிளென் பிலிப்ஸ்!

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிய கிளென் பிலிப்ஸ், தனது அதிரடியைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார். 46 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், மொத்தம் 49 பந்துகளில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும்.

இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

இந்திய அணியின் சார்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடக்கத்திலேயே சரிந்த இந்திய அணி!

260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. அபிஷேக் சர்மா 15 பந்துகளில் 27 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் திலக் வர்மா 35 ரன்கள், நமன் தீர் 28 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 21 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். இருப்பினும், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியாவுக்கு எதிராக வரலாற்றுச் சாதனை படைத்த சாண்ட்னர்!

இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 31 விக்கெட்டுகளுடன் சாண்ட்னர் முதலிடத்திலும், 30 விக்கெட்டுகளுடன் இஷ் சோதி இரண்டாவது இடத்திலும், 24 விக்கெட்டுகளுடன் கிறிஸ் ஜோர்டன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மறுபுறம், நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி இந்திய பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ ஃபிஷரும் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்தார்.

3-1 என தொடரில் முன்னிலையில் இந்தியா!

மூன்று தொடர் தோல்விகளுக்கு பழிவாங்கும் விதமாக இந்தியாவை மொத்தமாக முடித்துவிட்ட நியூசிலாந்து அணி. எப்பா என்ன அடி..! கிளென் பிலிப்ஸ் நொறுக்கி விட்டாப்ல, பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்தி நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

கடைசிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா? அல்லது நியூசிலாந்து அணி மற்றொரு வெற்றியைப் பெற்று தொடரை வலுவாக முடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.