விளையாட்டு

FIFA: உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்!

By Christon
11 Jun 2026, 08:06 AM
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
ஃபிஃபா (FIFA) அமைப்பின் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, மெக்ஸிகோவில் இன்று இன்று (ஜூன் 11) கோலாகலமாகத் தொடங்குகிறது.

ஒலிம்பிக் போட்டிக்கு இணையாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி, இன்று தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை வரலாற்றிலேயே முதல்முறையாகக் கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய 3 வட அமெரிக்க நாடுகளில் உள்ள 16 நகரங்களில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்பதும், ‘ரவுண்ட் ஆஃப் 32’ என்ற புதிய சுற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதும் இந்தத் தொடரின் மிக முக்கிய சிறப்பம்சங்களாகும்.

முதல் நாள் போட்டி மற்றும் புதிய அணிகள்

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் மெக்ஸிகோ - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனைத் தொடர்ந்து நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் தென் கொரியா - செக் குடியரசு அணிகள் மோதவுள்ளன. இந்த உலகக் கோப்பைத் தொடரில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரேஸில், ஜெர்மனி, இத்தாலி போன்ற முன்னணி அணிகளுடன் கேப் வெர்டே, கியுராகாவ், ஜோர்டன் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 நாடுகள் முதல்முறையாகத் தகுதிபெற்றுப் புதுமுக அணிகளாகக் களம் காண்கின்றன. போட்டி தொடங்குவதற்கு முன்பாக 3 நாடுகளிலும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடிய விடியக் காத்திருக்கும் இந்திய ரசிகர்கள்

போட்டிகள் நடைபெறும் வட அமெரிக்க நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே அதிக நேர வித்தியாசம் உள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30, 1:30 மற்றும் அதிகாலை 2:30 மணி அளவிலேயே தொடங்குகின்றன. இதனால், இந்தியக் கால்பந்து ரசிகர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்கு விடிய விடியப் போட்டிகளைக் கண்டு ரசிக்க வேண்டியிருக்கும்.