விளையாட்டு

FIFA: போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்.. மனமுடைந்து அழுத ரொனால்டோ!

By Christon
07 Jul 2026, 07:24 AM
உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்றில், போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த அதிர்ச்சித் தோல்வியுடன் 41 வயதான நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு கண்ணீருடன் முடிவுக்கு வந்துள்ளது.

கடைசி நிமிட கோல்

கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகளுக்கு இடையேயான 16-வது சுற்று ஆட்டம் கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக நீடித்தது. ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தை பலமாக வெளிப்படுத்தியதால் போட்டி சமநிலையை நோக்கியே நகர்ந்தது. ஆனால், ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+1-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் மெரினோ தலையால் (ஹெட்டர்) மிக அற்புதமாக ஒரு கோல் அடித்து அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார். இறுதிவரை இந்த முன்னிலையைத் தக்கவைத்த ஸ்பெயின், போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

கண்ணீருடன் விடைபெற்ற ரொனால்டோ

இறுதி விசில் ஒலித்தவுடன், தனது உலகக் கோப்பை ஜெர்சியுடன் ரசிகர்களை நோக்கிக் கைகளைத் தட்டியபடி ரொனால்டோ கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். போட்டிக்குப் பின் உருக்கமாகப் பேசிய அவர், "உலகக் கோப்பையிலிருந்து இப்படி வெளியேறுவது வருத்தமளிக்கிறது. எனது முழு உழைப்பையும் நாட்டுக்காகக் கொடுத்துவிட்டேன், நிம்மதியான மனதுடன் விடைபெறுகிறேன்" என்று தெரிவித்தார். மேலும், இதுவே தனது கடைசி உலகக் கோப்பைத் தொடர் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

வரலாற்றுச் சாதனை பயணம்

தனது நீண்டகால கால்பந்து பயணத்தில் 5 முறை 'பாலன் டி ஆர்' விருது மற்றும் யூரோ கோப்பையை வென்றுள்ள ரொனால்டோவுக்கு, உலகக் கோப்பை கனவு மட்டும் எட்டாக்கனியாகவே முடிந்துள்ளது. இருப்பினும், வரலாற்றிலேயே 6 வெவ்வேறு உலகக் கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையுடன் அவர் உலகக் கோப்பை அரங்கிலிருந்து விடைபெறுகிறார். காலிறுதியில் ஸ்பெயின் அணி, அமெரிக்கா - பெல்ஜியம் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது.