விளையாட்டு

சாமியாருக்கே பூசையா? ரூ. 5 கோடி ஏமாற்றினாரா விராட் கோலி?

By Christon
07 Oct 2026, 03:46 PM
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வர விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை, அது முற்றிலும் ஆதாரமற்ற பொய் என அவரது தரப்பு மறுத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜாவின் ஆசிரமத்திற்கு முதன்முறையாகச் சென்றதற்காகக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ. 5 கோடி பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, அவரது தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.

சமீபத்தில் பலஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா என்பவர் வெளியிட்ட தகவலில், ஆன்மீகக் குரு பிரேமானந்த் மகாராஜாவின் புகழை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2023-ஆம் ஆண்டு அவரது ஆசிரமத்திற்கு முதன்முறையாக வருகை தருவதற்காக விராட் கோலிக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், விராட் கோலியின் மேலாண்மை குழு இன்று அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "விராட் கோலி குறித்து பலஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய், ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை. பிரேமானந்த் மகாராஜ் மீது கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையும் மரியாதையும் காரணமாக மட்டுமே விராட் கோலி அந்த ஆசிரமத்திற்குச் சென்றார். எனவே, இதுபோன்ற தகவல்களைப் பரப்பும் முன் ஊடகங்கள் உண்மையைச் சரிபார்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பிரேமானந்த் மகாராஜாவின் தீவிரப் பக்தர்களாவர். இவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் உள்ள ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். கடைசியாக கடந்த ஜூலை மாதம் இருவரும் இந்த ஆசிரமத்திற்குச் சென்று வந்தனர்.