அரசியல்

விஜய் மேலாளர் என்னிடம் பேரம் பேசினார்.. பகீர் கிளப்பிய வேல்முருகன்!

By Christon
02 May 2026, 11:06 AM
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மேலாளர் தன்னிடம் பேரம் பேசியதாக தவாக தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை வடபழனியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை வடபழனியில் நடைபெற்ற விழாவில் நடிகர் ராதாரவி, இயக்குனர் விக்ரமன் மற்றும் நடிகை அம்பிகா உள்ளிட்ட பலர் முன்னிலையில் வேல்முருகன் உரையாற்றினார். அப்போது, 2014-ஆம் ஆண்டு வெளியான 'கத்தி' படத்திற்கு எதிராகத் தான் போராடிய காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். அன்றைய காலகட்டத்தில், இன்றைய தமிழக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் விஜய்யின் மேலாளர் தன்னை அணுகி, போராட்டத்தைக் கைவிடப் பேரம் பேசியதாக வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய்யின் மேலாளர் தன்னிடம் ஒரு பெரிய தொகையை நன்கொடையாக வழங்க முன்வந்ததாகவும், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வாகனங்கள் வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும் வேல்முருகன் தெரிவித்தார். இருப்பினும், தனது பொதுவாழ்க்கையில் யாரிடமும் ஒரு ரூபாய் கூட நன்கொடையாகவோ அல்லது கமிஷனாகவோ பெற்றதில்லை என்றும், லஞ்சம் மற்றும் கையூட்டு பெறாத அரசியல் தலைவன் தான் என்று அவர் தெரிவித்தார்.

பின்னணி என்ன?

கடந்த 2014-ல் 'லைக்கா' நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'கத்தி' படம், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்று கூறி அப்போது தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அதில் வேல்முருகனின் தவாக கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.