அரசியல்

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்.. அதிரடியில் இறங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!

By Christon
30 Jul 2026, 09:02 AM
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாகச் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்படத் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இந்தச் சோதனையின் போது பல்வேறு முக்கிய டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள டிஜிட்டல் ஆதாரங்களைச் சைபர் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (Cyber Lab) அனுப்பி லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளுக்குப் பிறகு, செந்தில் பாலாஜி மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய பிற நபர்களுக்குச் சம்மன் வழங்கி நேரில் விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே குதிரை பேரம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகிக் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையிலேயே, டாஸ்மாக் வழக்கிலும் அவரை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.