அரசியல்

டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம்!

By Christon
30 Jul 2026, 11:38 AM
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகச் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடைய 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தி, பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த ஆதாரங்கள் சைபர் தடய அறிவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வரும் சூழலில், செந்தில் பாலாஜியை நேரில் அழைத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்புக் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில், "முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை; பொத்தாம் பொதுவாகவே கூறப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் அதிகாரிகள் செய்த தவறுகளுக்குச் செந்தில் பாலாஜி பொறுப்பாக முடியாது" என்று வாதிடப்பட்டது.

ஆனால் காவல்துறை தரப்பில், "சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதால் விரிவான விசாரணை அவசியமாகிறது. புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதற்கும் போதிய ஆதாரங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளதாலும், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாலும் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.