ச ட்டமன்றத் தேர்தல் தோல்வியைவிட உட்கட்சியில் சீனியர் புள்ளிகளுக்கும் இளைஞரணி நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முட்டல் மோதல்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் மனஉளைச்சலை தந்திருக்கிறது இதுதொடர்பாக ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கடும் வார்த்தை போர்தான் அறிவாலயத்தை உலுக்கும் அரசியல் அப்டேட்!
இதுகுறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "ஆகஸ்ட் 4ம் தேதி நடந்த உதயநிதியின் கைது சம்பவம். தி.மு.க. வரலாற்றில் அழியாத இடத்தை பிடித்துவிட்டது. தேர்தல் தோல்வியால் துவண்டு கிடந்த தி.மு.க.வினரை எப்படி தட்டியெழுப்புவது என்று தவித்துக்கொண்டிருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உதயநிதி கைதைக் கண்டித்து மாஜி அமைச்சர்கள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை கைகோத்து ஓரணியில் திரண்டு நின்றதைப் பார்த்து உற்சாகமடைந்துவிட்டார். இந்த சம்பவத்திற்கு முன்பாக, தி.மு.க.வை சீரமைப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகளை மிஞ்சிடும் வகையில், அன்றைய தினம், கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டதைப்போல உடன்பிறப்புகள் சீறியதை அடுத்து, உதயநிதியை முழுமூச்சில் முன்னிலைப்படுத்தும் முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின்.
அது தொடர்பாக ஸ்டாலின், தன் குடும்ப உறுப்பினர்களிடமும், இரண்டாம்கட்ட தலைவர்களிடமும் சமீபத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, 'சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களிடம் மாஜி அமைச்சர்கள் பம்முவதை தடுத்து நிறுத்த உதயநிதிக்கு செயல் தலைவர் பதவியை உடனடியாக வழங்க வேண்டியது அவசியம். அதேபோல மாநில, மாவட்ட அளவிலும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்து இளம் தலைமுறையினருக்கான இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், அதற்கு அதிருப்தி தெரிவித்த மூத்த தலைவர்கள், 'தி.மு.க.வை பழிவாங்கும் நோக்கத்துடன் த.வெ.க அரசு, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஊழல் வழக்குகளைப் பதிவு செய்து மாஜி அமைச்சர்களை கைது செய்ய திட்டமிட்டிருக்கிறது. ஆளும்கட்சியின் இந்த அடக்குமுறையை முறியடிக்க வேண்டும் என்றால் நீண்ட அரசியல் அனுபவம்கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களால்தான் முடியும். இப்படியான நேரத்தில் சீனியர்களின் செல்வாக்கை குறைத்துவிடக் கூடாது. மேலும் இதனால், தலைவர் ஸ்டாலினின் செல்வாக்கும் குறைய வாய்ப்பிருக்கிறது.
இளைஞரணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி தலைமைக்கு வலுசேர்ப்பதற்காக இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகிகள் 16 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் வேப்பனஹள்ளி சீனிவாசன், வந்தவாசி அம்பேத்குமார், வானூர் கௌதமன், வால்பாறை சுதாகர் என நான்கு பேர் மட்டுமே அவர்களில் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆனால், விஜய் அலை வீசியபோதும் சீனியர்களான 32 மாஜிக்களில் 17 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
சட்டமன்றத்திலும் தவெ.க. அமைச்சர்களின் மிரட்டல் பேச்சை எதிர்கொண்டு பதிலடி தருபவர்கள் பெரும்பாலும் மாஜி அமைச்சர்கள்தான். இளைஞரணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டலும் பயிற்சியும் கொடுத்து வளர்த்தெடுக்கும் பொறுப்பில் உள்ள மாஜி அமைச்சர்களை கட்சிப் பதவியில் இருந்து ஓரங்கட்டினால், அது திமு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், நெருக்கடியான காலத்தில் துணிச்சலாக செயல்படுவதற்கு சீனியர்களால் மட்டுமே முடியும்.
வருங்காலத்தில் கூட்டணி பேச விரும்பும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள்கூட தலைவர் ஸ்டாலின் மீதான நல்லெண்ணம் காரணமாகவே அனுசரித்துப்போவார்கள். இப்போதே உதயநிதியை செயல் தலைவர் என்று முன்னிறுத்தினால், தி.மு.க.வை நோக்கி பிற அரசியல் கட்சித் தலைவர்கள் வருவதற்கு தயங்குவார்கள்' என்று தெரிவித்திருக்கிறார்கள். இதே பாணியில், ஸ்டாலின் குடும்பத்தில் இருந்தே உதயநிதிக்கு எதிராக ஒரு குரல் எழுந்திருக்கிறது. 'ஸ்டாலின், உதயநிதி மீது தனிப்பட்ட பகையை முதல்வர் விஜய் வெளிப்படுத்துகிறாரா என்ற சந்தேகம் இருக்கும் நேரத்தில் ஸ்டாலினின் அதிகாரத்தைக் குறைத்து உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி வழங்குவது இன்றைய தேதியில் ஒட்டுமொத்த கட்சியையும் சீர்குலைத்துவிடும்.
தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என இருவருமே இரட்டைக்குழல் துப்பாக்கிபோல த.வெ.க. அரசை எதிர்கொண்டு, இரண்டாம்கட்ட தலைவர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டியதுதான் முதற்கடமையாக இருக்க வேண்டும்' என தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படியான மாறுபட்ட கருத்துகளால், ஸ்டாலின் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளார். இந்த சூழலில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் போன்ற பதவிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன” என்று விரிவாக கூறினார்.
ஸ்டாலின் உதயநிதி இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறதா என மூத்த ஊடகவியலாளர் இதயாவிடம் கேட்டோம். 77 ஆண்டு வரலாறு கொண்ட தி.மு.க. இன்னும் பலமாக தொடர வேண்டும் என்றால், சீனியர்களின் அனுபவங்களும் இளம் நிர்வாகிகளின் வேகமும் ஒருசேர பங்களிக்க வேண்டும். தி.மு.க.வில் அனுபவசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடையே புதிய ஒருவரை பதவியில் அமர்த்துகிறபோது, அவருக்கு நிறைய எதிரிகள் வந்துவிடுவார்கள்.
அதற்கு பதிலாக, இளம் நிர்வாகிகளின் ஆளுமை குணத்தை வளர்த்து, அவர்களை எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறமைமிக்கவர்களாக மாற்றி பொறுப்புகளில் அமர்த்த வேண்டும். மாறாக பழம் தின்று கொட்டை போட்டவர்களே தொடர்ந்து பதவிகளில் நீடித்துவந்தால், அந்தக் கட்சியில் சேர்ந்தால் நமக்கு பதவி கிடைக்காது என இளம் தலைமுறையினர் வேறு கட்சிக்கு சென்றுவிடுவார்கள். எளியவர்களும் இளைஞர்களும் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கினால்தான் நம்பிக்கையோடு அதே கட்சியில் காத்திருப்பார்கள்.
அந்த வகையில் தலைமுறையினரும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதைப்போல கட்டமைப்பை உருவாக்கி வெற்றியைத் தேடி தருகிற முக்கிய கடமை தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. ஸ்டாலின் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. முதல்வராக விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியும் களத்தில் இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே பாதையில்தான் பயணிக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு உருவாகிவிட்டது. அனுபவசாலிகளும் இளம்
அதேசமயம், ஓ.பி.எஸ். உள்ளிட்ட மூத்த மாஜி அமைச்சர்கள், உதயநிதிக்கு சட்டமன்றத்தில் உரிய மரியாதை வழங்கி வழிநடத்துகிறார்கள். கட்சியைப் பொறுத்தவரை ஸ்டாலினும் உதயநிதிக்கு தேவையான அனைத்து அறிவுரைகளை வழங்கி வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. கூட்டு முயற்சியோடு இருவருமே தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும்தான் உண்மை என்றார்.
யார் கை ஓங்கப்போகிறது? காத்திருப்போம்!