அரசியல்

"நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தரத் தீர்வு"- மு.க.ஸ்டாலின் பதிவு!

By Christon
22 Jul 2026, 10:49 AM
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வெடித்த போராட்டம்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லியில் ஜூலை 20 அன்று இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெருமளவில் மோதல் வெடித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் பதிவு

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லியில் நடைபெறும் வரும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்த முதல் கட்சி திமுக. அதனால்தான், இந்த தேர்வால் ஏற்படும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே திமுக இதனை எதிர்த்து வருகிறது.

சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்டதாகவும் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை: நீட்தேர்வு ஒழிப்பு ஆகும். மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.