அரசியல்

நாதக வேட்பாளர் கைது: பாஜக-வின் Carbon Copy-ஆக செயல்படும் முதலமைச்சர்.. உதயநிதி கண்டனம்!

By Christon
20 Oct 2026, 03:57 PM
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மீதான கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அம்மாநில முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்காகத் தாராபுரம் வருகை தந்திருந்தார். அதே நேரத்தில் தாராபுரம் - வீராச்சிமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரும் பிரச்சாரம் செய்ய முற்பட்டனர்.

இருப்பினும், முதலமைச்சரின் வீதி உலா நடைபெறவுள்ளதால் அந்தப் பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர், காவல் துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் சென்ற பாதையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மற்றும் அவர் குறித்து அவதூறாகப் பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, கோவையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல் துறையினர், கார்த்திகா மற்றும் அவரது கணவரைக் கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.

இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.