அரசியல்

இனி தனித்து போட்டி.. மா.செ.க்கள் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்.. திமுகவின் அதிரடி பிளான்!

By Christon
08 Jun 2026, 02:56 PM
தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை வலுப்படுத்த திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதற்கான காரணங்கள் குறித்து ஆராய அக்கட்சி சார்பில் அமைக்கப்பட்ட கள ஆய்வுப் குழு தனது விசாரணையை நிறைவு செய்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்போம் என திமுக தெரிவித்து வந்தது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக ஆளுங்கட்சியாக இருந்த திமுக வீழ்த்தப்பட்டு, விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய திமுக தலைமை 36 பேர் கொண்ட ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்த வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் நேரில் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

நிர்வாகிகள் முன்வைத்த புகார்கள்

இந்த ஆலோசனையின் போது, தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு உரிய முறையில் இல்லை என்றும், அதன் காரணமாகவே தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்றும் பல நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், உட்கட்சிப் பூசல்கள் சரியான நேரத்தில் சரி செய்யப்படவில்லை என்றும், சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிர்வாகிகள், இனிவரும் காலங்களில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

கட்சி அமைப்பில் அதிரடி மாற்றம்?

தற்போது சேகரிக்கப்பட்ட அனைத்து விபரங்களையும் அறிக்கையாகத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அறிக்கை வரும் ஜூன் 10-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நிர்வாக வசதிக்காகப் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களின் கீழ் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.