அரசியல்

இடைத்தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Christon
17 Jun 2026, 12:44 PM
இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள இந்த நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாகத் தொடங்கியது. ஆனால், இந்தத் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரின் ராஜினாமா விவகாரத்தில் தமிழக சட்டசபை சபாநாயகர் எடுத்த முடிவு சட்டப்படியானது அல்ல என்றும், அது தவறானது என்றும் தங்களது வாதத்தை முன்வைத்தனர். எனவே, இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். எனினும், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் பணிகளில் தலையிட முடியாது எனக் கூறி, இடைத்தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.