அரசியல்

“முதல்ல உங்க வீட்டுப் பொண்ணுக்கு செய்வீங்களா?” – AI ஆபாச விவகாரம்.. ஆவேசமான குஷ்பூ!

By Sumalekha
10 Oct 2026, 04:50 PM
பெண்களின் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாகச் சித்தரிப்பவர்களுக்கு நடிகை குஷ்பூ வைத்த கேள்வி… இப்போது பேசுபொருளாகியிருக்கிறது!

தொழில்நுட்பம் வளர்வது தவறில்லை… ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தை வைத்து என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு எதிராகக் கடுமையான குரலைப் பதிவு செய்திருக்கிறார் நடிகை குஷ்பூ.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவியும் நடிகையுமான குஷ்பூ, கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சின்னத்திரை தயாரிப்பாளர்களின் பொருளாதார நெருக்கடி தொடங்கி, AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு வரை பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

தயாரிப்பாளர்களுக்கு ஏன் இந்த நெருக்கடி?

சின்னத்திரை தயாரிப்பாளர்களின் நிலை குறித்துப் பேசிய குஷ்பூ, எல்லாத் துறைகளிலும் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், தொலைக்காட்சிகள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் தொகை மட்டும் உயரவில்லை என்று வேதனை தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில், தயாரிப்பாளர்களுக்கு மட்டும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தொகையே இப்போதும் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் ஒட்டுமொத்தத் தொலைக்காட்சித் துறையும் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தயாரிப்பாளர்களின் சிரமங்கள் வெளியில் தெரிவதில்லை என்றும் கூறினார். சங்கத்துக்குத் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சங்கத்துக்காக நிதி திரட்ட மலேசியாவில் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகர் சிலம்பரசன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குஷ்பூ கூறினார்.

AI விவகாரத்தில் குஷ்பூவின் கேள்வி இதுதான்!

இந்தச் சந்திப்பில் கவனம் ஈர்த்தது AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த குஷ்பூவின் கருத்துகள்தான். ஒருவரின் புகைப்படத்தை அவருடைய அனுமதியின்றி ஆபாசமாக மாற்றுவது என்பது வெறும் தொழில்நுட்பப் பயன்பாடு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நபரின் மரியாதையையும் தனிப்பட்ட உரிமையையும் பாதிக்கும் செயல் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பத்தில் நல்லதும் இருக்கிறது, தவறான பயன்பாடும் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் என்று தெரிவித்த அவர், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிப்பவர்களின் மனநிலையைக் கடுமையாகச் சாடினார்.

அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள், முதலில் தங்கள் வீட்டுப் பெண்களை வைத்து இதேபோன்று செய்யத் தயாரா என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதே குஷ்பூவின் கேள்வி. மற்ற பெண்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, அந்தச் செயல் தங்களுடைய குடும்பத்தினருக்கு நேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும் என்ற தொனியில் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

தொழில்நுட்பம் வளரட்டும்… பெண்களின் பாதுகாப்பும் மரியாதையும் அதைவிட முக்கியம். AI வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்றாலும், அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களின் செயல்களைக் கேள்வி கேட்க வேண்டியது அவசியம். பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் AI-ஐப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் குஷ்பூ எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி, சமூக வலைதளங்களில் நிலவும் AI துஷ்பிரயோகம் குறித்த விவாதத்துக்கு மீண்டும் கவனம் ஈர்க்கிறது.