திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தை ஓட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் 3 வயது சிறுமியையை அதே பகுதியை சார்ந்த பிபின் மாஞ்சி (வயது 19) என்ற வடமாநிலத் தொழிலாளர் பாலியல் வன்கொடுமை செய்து புதருக்குள் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதருக்குள் வீசிச் சென்ற குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? காவல் துறை என்னதான் செய்துகிறது? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ”வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த சோஃபா மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது”. ”தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்கு புறம்பாக வாக்குக்கேட்பதற்கான டூல் ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் ”கடந்த 48 மணி நேரங்களில் மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது”. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் பேசும்போது நன்றாக உள்ளது. கோட் சூட் எல்லாம் போட்டுகொண்டு அறிக்கையை அவர் படிக்கும்போது நன்றாக தான் இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் அவர் செயல்படுத்துவதில்லை. முதலமைச்சர் விஜய் ப்ரோ, இந்த மூன்று வயது குழந்தையை பாருங்க ப்ரோ, நரம்பு புடைக்க பேசினீர்களே ப்ரோ, இந்த மூன்று வயது குழந்தைக்கு யார் பதில் சொல்வாங்க ? பாதிக்கப்பட்ட அனைவருக்கும் யார் பதில் சொல்வாங்க ? இன்னும் எத்தனை நாட்கள் உங்களின் ஆட்சி நடக்கும் ? மக்களை பற்றி நீங்கள் கவலைப்படுறீங்களா ? போதை பழக்கம் அதிகரித்து வருகின்றது. என்று கூறியுள்ளார்.
தமிழக காங் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ”குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு, நீதிமன்றத்தின் மூலம் விரைவாக கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.