அரசியல்

அதிமுக மாஜி அமைச்சர் சரணடைய அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

By Christon
17 Apr 2026, 05:34 PM
சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, ஏப்ரல் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக ஆற்றுமணல் வைத்திருந்ததாக, அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக, கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைய விதித்திருந்த கெடு, மார்ச் 31 ம் தேதி முடிவடைந்தது. சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். மார்ச் 30-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ததாலும், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி விடுமுறை காரணமாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய இயலவில்லை என்பதால், சரணடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, முன் ஜாமீன் உத்தரவின்படி சரணடைவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 28 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், 29,30 மற்றும் மே 1 ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.