தொகுதி மறுவரையறையை ஆட்சியில் இருந்தபோது திமுக கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தற்போது அதற்குத் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த முடிவு தமிழகம் மற்றும் டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இது வரும் காலத்திற்கான அரசியல் நகர்வா என்பது உள்ளிட்ட கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. அதேவேளை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதிலிருந்து மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்க வகை செய்வதுடன், இந்த நடைமுறை அடுத்த 25 ஆண்டுகள் அமலில் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும்போது, தற்போது உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை (மாநிலங்கள் 815, யூனியன் பிரதேசங்கள் 35) அதிகரிக்கலாம்.மசோதாவைக் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மசோதா போதிய ஆதரவின்றி வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், திமுகவின் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்குப் பிறகு பேசிய அக்கட்சியின் எம்.பி. ஆ. ராசா, மறுவரையறையைத் திமுக ஆதரிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர்…
மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கிறோம். நியாயமான தொகுதி மறுவரையறையை தற்போது அல்ல, எப்போதுமே திமுக ஆதரித்து வந்துள்ளது.நாடாளுமன்றத்தில் தற்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம் எனும் அளவில் இருக்கும் நிலையில், புதிய மசோதாவால் 7.21 சதவீதமாக உயர்கிறது. தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடாகும்.
எங்களுடன் இருக்கும்போது காங்கிரசுக்கு வழிகாட்டியாக நியாயமான தொகுதி மறுவரையறையைக் கூறியதே திமுகதான் என்றும் ஆ. ராசா குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்குமான எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையாது என்பதால், மசோதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக எப்போதும் முன்னணியில் உள்ளது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு நஷ்டம் எதுவுமில்லை.அதனால், தொகுதி மறுவரையறையைத் திமுக ஆதரிக்கிறது என்றும் ஆ. ராசா கூறினார்.
மேலும், திமுக முன்வைத்த 2 முக்கியக் கோரிக்கைகளும் மசோதாவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த முடிவை எடுக்காவிட்டால் 2011 மக்கள்தொகை அடிப்படையில் மாற்றிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அது பேராபத்தாகிவிடும் என்றும், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதில் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவின் இந்த முடிவிற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள போதிலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.திமுகவின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், இது நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், சங் பரிவார்களின் சதி அரசியலுக்குத் துணைபோவதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். தொகுதி மறுவரையறையைக் கடுமையாக எதிர்த்து வரும் இந்தியா கூட்டணியும் அவசர ஆலோசனை நடத்தியது.இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில், திருத்தப்பட்ட புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்திலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்த முன்மொழியப்பட்டது.மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக உயர்த்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத மசோதாவில் இடம்பெறாத 50 சதவீத உயர்வு தற்போது எழுத்துப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 650 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இடஒதுக்கீடு மற்றும் தொகுதி எல்லைகள் 2051-ஆம் ஆண்டு வரை மாற்றப்படாமல் இருக்கும்.முதல் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்குப் பிறகு, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் குழுவில் (Electoral College) சேர்க்கப்படுவார்கள்.
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் இறுதி உத்தரவுகளை எந்த நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது. ஏப்ரல் 16, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் தொகுதி மறுவரையறை முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் சூழலில், அதைக் கடுமையாக எதிர்த்து வந்த திமுக தற்போது திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது. இது தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.