அரசியல்

ஒரு வாக்கில் தோல்வி.. திமுக மாஜிக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

By Christon
28 Sep 2026, 07:18 AM
தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று, வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்றிருந்தார்.

சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு வர வேண்டிய தபால் வாக்குகள் தவறுதலாகத் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு எதிராகப் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.

அப்போது தவெக எம்.எல்.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தலில் தொகுதிகள் எண்கள் அடிப்படையிலேயே அடையாளம் காணப்படுகின்றன; பெயர்கள் அடிப்படையில் அல்ல. தபால் வாக்கு உறைகளில் தொகுதி எண், பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதாகக் கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் அடிப்படையுமில்லை" என்று வாதிட்டார்.

அதேவேளையில், தவெக எம்.எல்.ஏ.வின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதன்படி, தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து தவெக எம்.எல்.ஏ.வுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளார்.