தாராபுரத்தில் முதலமைச்சரின் ரோடு ஷோ நடைபெற்றபோது சாலை மறியலில் ஈடுபட்டுப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினரைத் தடுத்ததாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே எழுந்துள்ள கருத்து மோதல்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன.
நாம் தமிழர் கார்த்திகா கைது
தாராபுரத்தில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், காவல்துறையினரைத் தகாத வார்த்தைகளால் மிரட்டிப் பணியைத் தடுத்ததாகவும் கூறப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை மத்திய சிறையிலும், எஞ்சிய 3 பேர் தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வன்னி அரசு கடும் கண்டனம்
இந்தக் கைது நடவடிக்கைக்குத் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார். இதனைச் சமூக வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ள விசிக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு, பெரியார், அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் குறித்து சீமான் தெரிவித்த கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார். கோட்பாட்டு ரீதியாகவும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட சீமானின் அரசியலை திமுக மறந்துவிட்டிருக்கலாம் என்றும், ஆனால் பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்கும் விடுதலைச் சிறுத்தைகள் பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
ஆ. ராசா பதிலடி
வன்னி அரசின் இந்த விமர்க்கத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில், "அரைவேக்காடுகளின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் தேவையற்ற கைதை கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள். இந்தத் தடுமாற்றம் தன்னால் வந்ததல்ல; வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.