கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது முதலில் கால்நடை பராமரிப்புத்துறையிலும், பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையிலும் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் சொத்துகள் சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து 2006-ம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் என மொத்தம் 7 பேர் சேர்க்கப்பட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில், 2001 மே 14-ம் தேதி முதல் 2006 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தி, மகன் அனந்த பத்மநாபன், மகன் அனந்த ராமகிருஷ்ணன், மகன் அனந்த மகேஸ்வரன், சகோதரர் சண்முகானந்தன், சகோதரர் சிவானந்தன் ஆகியோர் பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துகள், வருமானம், செலவினங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் ரூ.4.90 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான குற்றப்பத்திரிகை தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சிறப்பு வழக்காக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணையின்போது அரசு தரப்பில் 79 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 312 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எதிர்தரப்பில் 6 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 74 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இருதரப்பு சாட்சியங்களின் விசாரணை நிறைவடைந்த நிலையில், அரசு தரப்பு இறுதி வாதத்தையும் நிறைவு செய்துள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு ஏற்கெனவே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு, கடந்த 2026 ஆகஸ்ட் 4-ம் தேதி அமலாக்கத்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், தூத்துக்குடி நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்ததன் ஆகிய ஏழுபேர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி சுபா தேவி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் உட்பட 7 வேறையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு தற்போது வந்திருப்பது தூத்துக்குடி மாவட்ட அரசியல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.